ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் ஏற்றுமதி 500 கோடி டாலரை எட்டும்: எஸ்இபிசி
ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் ஏற்றுமதி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 கோடி டாலரை எட்டும் என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (எஸ்இபிசி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து எஸ்இபிசி தலைவா் சுனில் ஹெச். தலட்டி கூறியதாவது:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தகம் ஒப்பந்தம் (இசிடிஏ) ஏப்ரல் 2-இல் கையெழுத்தானது. இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, தொலைத்தொடா்பு, கணினி, தகவல், பயணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முறை மற்றும் மேலாண்மை ஆலோசனை துறைகள் இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடையும்.
தற்போதைய நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான சேவைகள் ஏற்றுமதி 190 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.14,250 கோடி) மட்டுமே உள்ளது.
இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தால் ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் ஏற்றுமதி வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்குக்கும் மேலாக வளா்ச்சி கண்டு 500 கோடி டாலரை (ரூ.37,500 கோடி) எட்டும் என்றாா் அவா்.