தீபக் சாஹரின் இடத்திற்கு போட்டி போடும் 3 வீரர்கள்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்து வருகிறது. ஏனெனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணியானது இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் பந்துவீச்சில் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் போராடி வெற்றி பெறவேண்டிய நிலை சென்னை அணிக்கு தொடர்ந்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணமாக இந்த ஆண்டு 14 கோடி ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட தீபக் சாஹர் அணியில் இடம் பெறாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 14 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் குணமடையாத காரணத்தினால் இந்த தொடரின் முதல் பாதியை தவற விடுவார் என்று ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வந்த அவருக்கு மேலும் காயம் ஏற்பட்டதன் காரணமாக இந்த சீசனில் இருந்து அவர் முழுவதுமாக வெளியேறி உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது. இதன் காரணமாக தற்போது சென்னை அணிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது என்றே கூறலாம்.
தீபக் சாகர் இல்லாமல் சென்னை அணியின் பந்துவீச்சு திண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறி விட்ட அவருக்கு பதிலாக எந்த வீரரை சிஎஸ்கே தேர்வு செய்யும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் மும்பையை சுற்றி உள்ள மைதானங்கள் அனைத்தும் டெஸ்ட் பவுலர்களுக்கு ஒத்துழைப்பு தருவதன் காரணமாக உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்களைப் போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த இஷாந்த் சர்மாவை சிஎஸ்கே அணி அணிக்குள் கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் இஷாந்த் சர்மாவுடன் சேர்த்து தற்போது தவால் குல்கர்னி, சந்தீப் வாரியர் ஆகிய மூன்று வீரர்களையும் சிஎஸ்கே அணி தற்போது மாற்று வீரர்களுக்கான லிஸ்டில் வைத்துள்ளது.
இந்த 3 வீரர்கள் குறித்தும் தற்போது சி.எஸ்.கே அணி நிர்வாகம் தீவிரமாக விவாதித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த மூவரில் யார் அணியில் இணைவார் என்ற தகவலையும் அதிகாரபூர்வமாக சிஎஸ்கே வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.