போராட்டம் நடத்தும் மக்களின் உரிமையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் – அரசிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்!
ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் சட்டப்பூர்வ உரிமையைத் தடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
காலி முகத்திடலில் உள்ள போராட்ட இடத்திற்கு அருகில் பல பொலிஸ் ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதையடுத்து சங்கம் விடுத்த அறிவித்தலை அடுத்து பாரவூர்திகள் அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் அமைதியான போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது பாரதூரமான சம்பவம் என தெரிவித்துள்ளதோடு , இவ்வாறான நடவடிக்கைகள் நாடு, ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.