மீண்டும் கைகோர்க்கும் முருகதாஸ்–சன் பிக்சர்ஸ் கூட்டணி…
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்க போகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஹீரோ யார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரட்சகன் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக தனது சினிமா பயணத்தை துவக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் அசிஸ்டென்டாக பணியாற்றினார். நான்கு ஆண்டுகளாக அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த முருகதாஸ், 2001 ம் ஆண்டு அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி, இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் முருகதாசுக்கு மட்டுமின்றி அஜித்திற்கும் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படங்களை இயக்குவது தான் ஏ.ஆர்.முருகதாசின் ஸ்டைல். அப்படி அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்துள்ளன.
ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கி உள்ளார். பல படங்களுக்கு கதை மட்டும் எழுதி உள்ளார். சில படங்களில் சிறிய ரோல்களில் நடிக்கவும் செய்துள்ளார் முருகதாஸ். கடைசியாக 2020 ம் ஆண்டு ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் முருகதாஸ் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது.
இந்நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப உள்ளார் முருகதாஸ். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து, ஏறக்குறைய இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி விட்டது. இதற்கு முன் முருகதாஸ் இயக்கிய சர்கார், தர்பார் போன்ற படங்களையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது.
இதுவரை ரஜினி, விஜயகாந்த், சூர்யா, அஜித், விஜய் ஆகியோரை இயக்கிய முருகதாஸ், இந்த புதிய படத்தில் முதல் முறையாக விக்ரமை இயக்க போகிறாராம். முருகதாஸ்-விக்ரம் கூட்டணி மட்டுமல்ல, விக்ரம்-சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைப்பதும் இதுவே முதல் முறை. இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் எந்த படத்திலும் நடித்ததில்லை. முதல் முறையாக இணையும் முருகதாஸ்-விக்ரம்-சன் பிக்சர்ஸ் கூட்டணி மிகப் பெரிய ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். அதோடு தர்பாரில் பெற்ற அனுபவங்களை படமாக வைத்து முருகதாஸ் இந்த படத்தை வேற லெவலில் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினி நடிக்க உள்ள தலைவர் 169, தனுஷின் திருச்சிற்றம்பலம், சந்திரமுகி 2, விஜய்சேதுபதியின் விஜேஎஸ் 46 போன்ற படங்களை தயாரித்து வருகிறது விரைவில் முருகதாஸ்-விக்ரம் படம் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ்- அஜித் கூட்டணியும் முதல் முறையாக இணைய உள்ளதாம்.