“கோட்டா வீட்டுக்குப் போ” யாழில் தீப்பந்தப் போராட்டம்: பலரும் பங்கேற்று காலிமுகத்திடல் தன்னெழுச்சிக்கு ஆதரவு தெரிவிப்பு (photos)
“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் தொடரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றிரவு தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
யாழ். பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்தப் போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணைச் சுற்றுவட்டம் வரை பேரணியாகச் சென்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் இளையோர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் “கோட்டா வீட்டுக்குப் போ”, “குடும்ப ஆட்சியில் நாட்டைச் சூறையாடாதே!”, “ராஜபக்சக்கள் அனைவரும் வீட்டுக்குப் போக வேண்டும்”, “இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்”, “எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே?”, “சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு” போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.