தருமபுரம் ஆதினம் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பங்கேற்க வலுக்கும் எதிர்ப்பு.. காரணம் என்ன?
தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதற்கு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால் பிற மாநிலங்களில் இருந்தும் ஆட்களை திரட்டி வந்து ஆளுநருக்கு வரவேற்பு அளிப்போம் என்று பாஜக மாநில துணை தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் வருகிற 19-ஆம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார்.
ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற அக்கட்சியினர் ஆதீன குருமகா சந்நிதானம் இல்லாததால் ஆதீன நிர்வாகத்தில் மனுவை ஒப்படைத்தனர். அந்த மனுவில், மத்திய அரசின் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவைiயில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீரமானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார்.
நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.இந்நிகழ்ச்சியில் ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என தருமபுரம் ஆதீனத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பின்னர் அவர்கள்’ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீன நிகழ்ச்சி நடைபெற்றால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தருமபுரம் ஆதீனத்துக்கு ஆளுநர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் மற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம் என்று பாஜக மாநில துணை தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருப்பு முருகானந்தம், இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு வரும் தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது.
தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம்.
தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.