தொடரும் ஒலிப்பெருக்கி சர்ச்சை: ஸ்பீக்கரில் மக்கள் பிரச்னைகளை ஒலிபரப்பி கவனம் ஈர்த்த சமாஜ்வாடி உறுப்பினர்
ஒலிபெருக்கி சர்ச்சை நாடு முழுவதும் விவாதிக்கப்படும் வேலையில், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஒருவர் ஒலி பெருக்கி மூலம் விலைவாசி உயர்வு குறித்த பாடலை ஒலி பரப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக சர்ச்சை கிளம்பியுள்ளது. மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, மீறி பயன்படுத்தினால் பதிலுக்கு நாங்கள் மசூதி வாசல்கள் முன்பு ஒலிபெருக்கிகளை கொண்டு அனுமன் சாலிசா பாடலை ஒலிக்க செய்வோம் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்ரே பகிரங்கமாக பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலங்களில் மசூதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் விதிமுறைகளை மீறும் விதமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்திவரும் நிறுவனங்களுக்கு அம்மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் உள்ள மசூதியில் ஒலிபெருக்கி மூலம் அசான் வாசித்ததற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்புடைய ABVP சங்க மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஒலிபெருக்கியை மத நிகழ்வுக்கு அல்லாது வித்தியாசமாக பயன்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதுதொடர்பாக வாரணாசியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ரவிகாந்த் விஸ்வகர்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதார, பாதுகாப்பு தேவைகள் குறித்து பேசாமல் மக்கள் மத ரீதியாக ஒலி பெருக்கி பயன்படுத்துவது குறித்து சண்டைபோட்டு வருகின்றனர். எனவே, இது போன்ற விஷயங்களில் மக்கள் திசைதிரும்பாமல், முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எனது வீட்டில் விலைவாசி உயர்வு குறித்த பாடலை லவுட் ஸ்பீக்கர் மூலம் ஒலிக்க வைக்கவுள்ளேன்” என்றுள்ளார்.
இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ள முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், “இனி லவுட் ஸ்பீக்கர்களில் சோசியலிச கொள்கைகளும்ம் ஒலிக்கும். விலைவாசி உயர்வு, வேலையின்மை, குற்றங்கள் போன்ற விவகாரங்கள் ஒலிக்கும்” என்றுள்ளார்.