ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் மாற்றம்: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு?
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கி பெற வேண்டி, நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆறு மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட இந்த மசோதாவை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறி ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே, சட்டமன்றத்தை அவசரமாக கூட்டிய தமிழக அரசு, பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இம்முறை ஆளுநரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது என்பதால் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே இது தொடர்பாக பிபிசி ஊடகத்திற்கு ஆளுநர் தரப்பு அளித்த விளக்கத்தில், பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்திருந்தது.
நீட் மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததால் அதிப்தி அடைந்த திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்தன. ஆளுநர் குறித்து பகிரங்கமாக அரசியல் கட்சிகள் விமர்சனத்தை வைத்து வருகின்றன. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.