ஒழுங்காக எழுதவில்லை என யுகேஜி மாணவன் மீது தாக்குதல்: 3 ஆசிரியர்கள் கைது
தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என கூறி யுகேஜி மாணவனை அடித்த 3 ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 6 வயது மாணவன், அப்பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். அந்த மாணவனுக்கு கடந்த 9 ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, மாணவன் ஆங்கில எழுத்துகளான ABCD மற்றும் அ,ஆ,இ,ஈ போன்ற தமிழ் எழுத்துகளை ஒழுங்காக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்காக 3 ஆசிரியர்கள் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்கள் அவனின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு அழைத்து செல்லும் போது சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் பிரின்சி, வகுப்பு ஆசிரியர் இன்டியனா வான், ஆங்கில ஆசிரியர் மோனோ பெராரா ஆகியோரை திருவிக நகர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியர்கள் 3 பேரும் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.