வங்கதேசத்தில் மனித உரிமைகள் மீறல்; அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட மனித உரிமைகள் அறிக்கை 2021ஐ வங்கதேசம் கடுமையாக மறுத்துள்ளது.
அந்த அறிக்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், தேர்தல் நடைமுறை, நாட்டில் கருத்து சுதந்திரம் போன்ற பிரச்சினைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பப்பட்டது. வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அந்த அறிக்கையில் உண்மைக்கு புறம்பான பிழைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வங்கதேசத்தில் நிலவும் மனித உரிமைகளின் யதார்த்தத்தை அந்த அறிக்கை பிரதிபலிக்கவில்லை. இது ஒருதலைபட்சமான அறிக்கையாக உள்ளது. நாராயண்கஞ்ச் ஏழு பேர் கொலை வழக்கில், 16 ஆர்.ஏ.பி அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையும், மேஜர் சின்ஹா கொலை வழக்கில் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதையும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டி, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளது.
மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன. அதற்காக முன்னேற்ற நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. ஐநா மனித உரிமைகள் அமைப்புடன் வங்கதேச அரசாங்கம் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து சர்வதேச கூட்டாளிகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வங்கதேச அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.
இந்த அறிக்கை சமூகத்தையும் அரசாங்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பான சமூகத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது.மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும் தேவையான முயற்சிகளை தொடர அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
இவ்வாறு வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.