இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்காது தவறு செய்துவிட்டேன்.
இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்காதது தவறு என தாம் தற்போது கருதுவதாகவும், மீண்டும் அந்த உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய வேலைத்திட்டம் முன்னரே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாத மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்று நேரத்தைச் செலவிட வேண்டிய வலியும் ஏமாற்றமும் மிகவும் நியாயமானது எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
அரசாங்கம் தவறுகளை செய்துள்ளதாகவும், அந்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல தாம் தயாராக இருப்பதாகவும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களை விவாதித்து நிறைவேற்றுவதற்கு எந்த நேரத்திலும் தனது பூரண ஆதரவை நாடாளுமன்றத்திற்கு வழங்கத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள் என்பது சிறப்புரிமைகள் அல்ல பாரிய பொறுப்பு என்பதனால் கூடுதல் சலுகைகளைப் பயன்படுத்தாமல் நேர்மையான, வினைத்திறன் மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அமைச்சர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அனைத்து நிறுவனங்களும் ஊழலற்ற மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றும், பல நிறுவனங்களை வேலைவாய்ப்பில் நிரப்பாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களாக மாற்றுவது அமைச்சர்களின் பொறுப்பாகும் என்றும் நிதி நெருக்கடி, பொருளாதார நெருக்கடியினால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் தாம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிக்கும் பொறுப்பை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இன்னல்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளையர்கள் குழுவொன்று உருவாகி வருவதாகவும், இவ்வாறான மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் அரசியல் காரணங்களால் பல தசாப்தங்களாக தாமதமாகி வரும் சில தீர்மானங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு சென்று எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச, நாடு தொடர்ந்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.