முஸ்லிம் கட்சிக்காரர்களின் வேடிக்கையான ஒழுக்காற்று நடவடிக்கை..!

ஒழுக்காற்று நடவடிக்கை முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “ஒழுக்காற்று நடவடிக்கை என்பது முஸ்லிம் கட்சிகளால் வேடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இருபதாம் திருத்த சட்டத்தின் பின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்
“ஆனால், வழங்கப்பட்டதோ தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகள். மீண்டும் நிதி சட்டமூலம், வரவு – செலவு திட்டம் போன்றவற்றில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை என்றார்கள். நான்கு மாதங்களாக ஒன்றுமில்லை.
“ஆனால், இன்று அவர்கள் பெசில் ராஜபக்ஷவுடன் அமைச்சுக்களுக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அமைச்சுப் பதவிகளுக்கு பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் எவ்வாறு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வாக்களிப்பார்கள்.
“இது ஒன்றும் ஹக்கீமுக்கு தெரியாமலில்லை. மக்களை ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் அவரும் ஏமாற்றி வருகிறார் என்பதே உண்மை.
“ராஜபக்ஷக்கள் எவ்வாறு சிங்கள மக்களை ஏமாற்றி வந்தனறோஅதேபோன்றே முஸ்லிம்களை முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஏமாற்றி வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.