கோடநாடு கொலை வழக்கு : கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தேயிலை எஸ்டேட் பங்களா உள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து , பங்களாவுக்குள் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த கொள்ளை, கொலை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மூளையாக செயல்பட்டதாக கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் இதன் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க திட்டமிட்ட போது கனகராஜ் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
2017 முதல் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. தனிப்படைகள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அனுபவ் ரவி கோவை மாநகர அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர். அனுபவ் ரவியின் நண்பரான சென்னையை சேர்ந்த அசோக் என்பவரிடம் கனகராஜ் டிரைவராக வேலை பார்த்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததால் அனுபவ் ரவியிடம் தற்போது விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.
2017 ம் ஆண்டு ஏப் 28 ம் தேதி, இறந்து போன கனகராஜ், தன்னை தொடர்பு கொண்டு, தான் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியதாகவும், அவரை உடனே சரணடையுமாறு தான் அறிவுறுத்தியதாகவும் அனுபவ் ரவி ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்போது அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் நேரடி கண்காணிப்பில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.