ஒரு நாள் மழைக்கே ரூ.3 கோடி நஷ்டம் – வாழை விவசாயிகள் கண்ணீர்
திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியில், உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசனத்தில், 2,000 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன், இடி, மின்னலுடன் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்தது.
சூறாவளி காற்றினால், கோப்பு, எட்டரை, குழுமணி, பேரூர், வயலூர், சோமரசம்பேட்டை பகுதிகளில், 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த, வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தேசமடைந்த வாழைகளின் மொத்த மதிப்பு, 3 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியபோது, “வாழைக்கு காப்பீடு செய்வதற்கான வாய்ப்பு ஜூலை மாதத்துடன் முடிவடைந்து விட்டது. தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் காப்பீடு செய்யவில்லை.அதற்கு காரணம் வருவாய்த்துறையினர் எங்களுக்கு சிட்டா, அடங்கல் வழங்காததுதான்.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் மட்டுமே காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு வழங்கப்படுவதில்லை. ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவிட்டு உள்ளோம். அறுவடை நேரத்தில் முறிந்த வாழைகளால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு விவசாயியும் தங்களது நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியும் தான் வாழை பயிரிட்டோம். தற்போது வாங்கிய கடனுக்கு எப்படி வட்டி கட்டுவது என்று தெரியவில்லை.
தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கி, வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்” என்கின்றனர்.