நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான தருணம் இதுவல்ல! – தயாசிறி சுட்டிக்காட்டு.
“அரசு புதிதாக நியமித்துள்ள அமைச்சரவை பயனற்றது. அதேவேளை, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான தருணம் இதுவல்ல.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
ஆகவே நாடாளுமன்றத்தில் யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது என்பதைப் பற்றிச் சிந்திக்காது நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது பற்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்து பேசி தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நேற்றிரவு சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு தற்போது மிக மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது ஆகவே, அரசிடம் மக்களது கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றே கூற வேண்டும். அதுமாத்திரமன்றி சமகால பிரச்சினைகளோடு நாட்டைக் கொண்டு செல்வதும் கடினமாகும்.
தற்போது எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றன. இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான தருணம் இதுவல்ல.
நாடு நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படவேண்டும் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்தப்படும் வகையில் அரசமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டின் சமகால நிலைமைகளை கலந்துரையாடி ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு முற்படவேண்டும்.
நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு இளைஞர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று எழும் பட்சத்தில் நாடு நெருக்கடியையே எதிர்கொள்ளும்.
ஆகவே, இப்பிரச்சினையை அணுகும் வகையில் அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஏற்றுக்கொள்ளும் வகையிலான சட்ட திருத்தங்களை அமுல்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாடாளுமன்றம் அதிகாரங்களைத் தனதாக்கிக் கொள்ளும் பட்சத்தில் அனைத்து நடவடிக்கைகளும் இயல்பாக முடியும். அத்தோடு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” – என்றார்.