வீதிகள் மறிக்கப்பட்டு போராட்டங்கள் இடம்பெறும் இடங்களின் விபரம்…
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (19) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி , ரம்புக்கனை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன கம்பளை, இரத்தினபுரி, தெல்தெனிய ஆகிய இடங்களில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , ரம்புக்கனை ரயில் பாதையை மக்கள் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அந்த வீதியூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் காரணமாக காக்கப்பள்ளி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க 18ஆம் மைல் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதோடு கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியில் கலர் லைட் சந்தி என அழைக்கப்படும் பிரதான சந்தியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்து பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தோடு , கண்டி – மஹியங்கனை வீதி முற்றாக தடைப்பட்டுள்ள தெல்தெனிய நகரில் மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு – காலி பிரதான வீதியை மறித்து காலி நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்திற்கு இடையூறாக பேருந்துகள் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை நகரிலும் இவ்வாறான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது