ரூ.8.5 லட்சம் கோடி வருவாய்; பால் உற்பத்தியில் உலகளவில் இந்தியா தான் டாப் – பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய டெய்ரி பண்ணையை திறந்து வைத்தார். அத்துடன் அங்கு உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையும் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா ஆண்டுதோறும் பால் பொருள் மூலம் ரூ.8.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இது கோதுமை, நெல் உற்பத்தி வருவாயை விட அதிகமாகும். இதன் மூலம் பால் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகள் பெருமளவில் பயனடைகிறார்கள். உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது” என பெருமையுடன் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ” நான் 2014ஆம் ஆண்டு டெல்லிக்கு பிரதமராக சென்ற போது சிறு விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டேன். இன்று நான் சிறு விவசாயிகளுக்கு நேரடியாக 2,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன். ஒரு ரூபாய் உதவித்தொகையில் பயனாளர்களுக்கு 15 பைசா மட்டுமே செல்கிறது என முன்பிருந்த பிரதமர் சொல்வார். ஆனால், நான் ஒரு ரூபாயில் ஒரு பைசா விடாமல் அனைத்தையும் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கிறேன்” எனக் கூறினார்.

பால் பொருள் உற்பத்தி துறையில் வளர்ச்சி அடைவது என்பது தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு செல்ல வழிவகுக்கும் எனவும் இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் விரைந்து நாட்டின் விவசாயிகள் வாழ்வு மேம்படும் எனக் கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தற்போது பிரதமர் மோடியின் கவனம் குஜராத் மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்மை காலமாக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை குஜராத் மாநிலத்தில் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, உலக தலைவர்களையும் குஜராத் மாநிலத்திற்கு வரவழைக்கத் தொடங்கியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாமை குஜராத்திற்கு அழைத்துள்ள பிரதமர் அங்கு உலக சுகாதார அமைப்பின் புதிய பாரம்பரிய மருத்துவ மையத்தை ஜாம்நகரில் இன்று தொடங்கிவைத்துள்ளார். அடுத்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் குஜராத் செல்லும் பிரதமர் மோடி அங்கு இரு நாடுகளுக்கு இடையே புதிய தொழில் ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.