நல்லாட்சி அரசின் காலத்தில் நான் துப்பாக்கியால் பதிலளிக்கவில்லை மைத்திரி கடும் கண்டனம்.
“எனது தலைமையிலான நல்லாட்சி அரசின் காலத்தில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை. அதேநேரம் போராட்டக்காரர்களுக்குத் துப்பாக்கிகளால் பதிலளிக்கவும் இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“2015ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது முதல் எனது பதவிக்காலம் முடிவடையும் வரையில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதேபோன்று போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கியால் பதிலளிக்கவும் முற்படவில்லை.
நிராயுதபாணிகளுக்குத் தோட்டாக்களை நான் பரிசளிக்கவும் இல்லை. ஆகவே, ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்” – என்றார்.