ஐபிஎல் 2022: ஹசில்வுட் வேகத்தில் வீழ்ந்தது லக்னோ!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஜோஷ் ஹசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் 4 ரன்னிலும், விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 11 பந்தில் 23 ரன்கள் அடித்து க்ருணல் பாண்டியாவின் சுழலில் வீழ்ந்தார்.
பிரபுதேசாய் 10 ரன்னும், ஷபாஸ் அகமது 26 ரன்னும் மட்டுமே அடித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸ் 64 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து, 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸருடன் 8 பந்தில் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 181 ரன்களை குவித்து, 182 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூக்கு நிர்ணயித்தது.
அதன்படி கடின இலக்கை துரத்திய லக்னோ அணியில் குயிண்டன் டி காக் (3), மனீஷ் பாண்டே (6) என ஹசில்வுட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல் ராகுல் – குர்னால் பாண்டியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்னால் பாண்டியா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆயூஷ் பதோனியும் 13 ரன்களோடு நடையைக் கட்டினார். அதனைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆர்சிபியின் வெற்றி உறுதியானது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.