பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலில் வெல்லப்போவது யார்? : சண் தவராஜா

பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலில் – முன்கூட்டியே எதிர்வு கூறப்பட்டதைப் போன்றே – நடப்பு அரசுத் தலைவர் இம்மானுவல் மக்ரோனும் தீவிர வலதுசாரி வேட்பாளரான லீ பென் அம்மையாரும் இரண்டாம் சுற்றுக்குத் தெரிவாகி உள்ளனர். 

2017இல் நடைபெற்றதைப் போன்றே இரண்டாம் சுற்றில் இருவரும் மோதும் நிலை உருவாகி உள்ளது. 

2017 மே 7இல் நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில் 66.10 வீத வாக்குகளைப் பெற்று மக்ரோன் அரசுத் தலைவராகத் தெரிவானார். 

ஆனால், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுக்கான வாக்களிப்பில் மக்ரோன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ள போதிலும் 2017இல் பெற்றதைப் போன்று இலகுவான வெற்றியைப் பெற மாட்டார் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் நிலவும் பொருளாதார நெருக்கடி, கொரோனாப் பெருந் தொற்று தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்தி, சாமானிய மக்களின் குரலாக அரசாங்கம் இல்லாத நிலை மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்புணர்வு எனப் பல காரணங்களால் மக்ரோன் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. மிக இளம் வயதில் அரசுத் தலைவராக உருவெடுத்த மக்ரோன் உள்நாட்டு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தருவதை விடவும் உலக விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.

 

அவ்வாறு அயல் விவகாரங்களில் அவர் அதிக கவனத்தைச் செலுத்திய போதிலும் அத்தகைய விவகாரங்களில் அவரால் வெற்றியைக் காண முடியவில்லை என்பது அவர் மீதான விமர்சனங்களுள் ஒன்று. குறிப்பாக பிரான்சின் முன்னாள் காலனித்துவ நாடான மாலியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை அண்மையில் பிரான்சுக்கு உருவானது. இது ஒரு இராஜதந்திரத் தோல்வியாகப் பார்க்கப்படுகின்றது. இரண்டு போட்டி அரசாங்கங்களைக் கொண்ட நாடான லிபியாவில் பொது இணக்கப்பட்டை ஏற்படுத்தும் நோக்குடனான ஒரு உயர்மட்ட மாநாட்டை மக்ரோன் அண்மையில் அதிக விளம்பரங்களுடன் முன்னெடுத்திருந்தார்.

அது கூட ஈற்றில் உரிய இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் பிசுபிசுத்துப் போனது. இறுதியாக உக்ரைன் விவகாரத்தில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மக்ரோன் மேற்கொண்ட முயற்சி கூட வெற்றியளிக்கவில்லை.

மறுபுறம், உள்நாட்டில் இளைஞர்களும், தொழிலாளி வர்க்கமும் பிரதான வேட்பாளர்களை விட்டு விலகிச் செல்லும் போக்கே தென்படுகின்றது. ‘செல்வந்தர்களின் அதிபர்’ என வர்ணிக்கப்படும் மக்ரோனும், ‘நவ பாசிசவாதி’ என வர்ணிக்கப்படும்  லீ   பென் அம்மையாரும் இளைஞர்களதும், தொழிலாளி வர்க்கத்தினதும் கவனத்துக்கு உரியவர்களாக இல்லாமற் போவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இதனாலேயே அவர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்த இடதுசாரி வேட்பாளரான ஜீன் லக் மெலன்சோன் அவர்களுக்கு அதிகளவில் வாக்களித்திருந்தனர். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்; 21.95 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றிருந்தார். 23.15 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட லீ பென் அவர்களை விடவும் 420,882 வாக்குகளையே அவர் குறைவாகப் பெற்றிருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, 27.85 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற மக்ரோன், லீ பென் அவர்களை விடவும் 1,649,529 வாக்குகளையே அதிகமாகப் பெற்றிருந்தார்.

 

முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற வேட்பாளர்கள் இருவரும் அளிக்கப்பட்ட வாக்குகளில் மொத்தம் 51 விழுக்காடு வாக்குகளையே பெற்றிருந்தனர். மொத்த வாக்காளர்களில் 75 விழுக்காடு வாக்காளர்கள் மாத்திரமே வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர். 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் முதல் இருவரைத் தவிர மற்ற ஒன்பது பெரும் இணைந்து 49 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தனர் என்பது பிரான்ஸ் மக்களிடையே நிலவும் பிளவுபட்ட மனநிலையைத் தெளிவாக உணர்த்தப் போதுமானது. அது மாத்திரமன்றி அடுத்த அரசுத் தலைவராக வர உள்ள ஒருவரை சுமார் அரைவாசி அளவிலான மக்கள் ஆதரித்து நிற்கவில்லை என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.

வாக்களித்தவர்களில் 35-64 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகர் லீ பென் அம்மையாரை ஆதரித்துள்ளதாகவும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் அநேகர் மக்ரோனுக்கு அதிக அளவில் வாக்களித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இளைய தலைமுறையினர் மத்தியில் வலதுசாரிக் கருத்துக்களின் பரவல் அதிகமாக உள்ளதை இந்தப் போக்கு உணர்த்துகின்றது. இது எதிர்காலம் தொடர்பிலான கவலைகளையும் ஏற்படுத்துகின்றது.

24ஆம் திகதி நடைபெறப் போகும் இரண்டாம் கட்டத் தேர்தல் தொடர்பிலான கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. பெரும்பாலும் 51-49 என்ற விகித அடிப்படையிலேயே மக்ரோன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கும் அதேவேளை, லீ பென் அம்மையார் 50.5-49.5 என்ற விகித அடிப்படையில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மற்றுமொரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. மீதமுள்ள வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் மக்ரோனுக்கே தமது ஆதரவாளர்கள் வாக்களிக்க வேண்டும்,

தீவிர வலதுசாரிகளின் கரங்களில் ஆட்;சியதிகாரம் செல்வது ஆபத்தானது எனக் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவர்களது ஆதரவாளர்கள் அந்தக் கோரிக்கையை நூறு விழுக்காடு செவிமடுப்பார்களா என்ற கேள்வி எழுகின்றது. மறுபுறம், யார் வென்றாலும் அது சாமானிய மக்களுக்கான ஆட்சியாக இருக்காது, எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகின்றது.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், தேர்தல்களில் ஆர்வத்தோடு பங்கெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதையே உலகளாவிய அளவில் பார்க்க முடிகின்றது. இதனை ஜனநாயக முறைமையின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றார்கள் என்றவாறாகப் புரிந்து கொள்வதா அன்றி பொதுவாக அரசியல் மீதே மக்கள் வெறுப்புக் கொண்டுள்ளார்களா எனப் புரிந்து கொள்வதா எனத் தெரியவில்லை. அதே வேளை, தேர்தல் ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்புக்கு மாறான தெரிவுகள் இடம்பெறும் சூழல் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நீண்ட ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரான்ஸ் நாட்டிலும் இதே நிலையே உள்ளது. தங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் எவரும் தேர்தல் களத்தில் இல்லை என்ற எண்ணமே தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான பிரதான காரணமாக உள்ள நிலையில், தமது ஜனநாயகக் கடமையைத் தவற விடுவது சரியானதா என்ற கேள்வியும் எழுகின்றது. முடிவில், ஒருவரை விடவும் மற்றவர் ஓரளவேனும் பரவாயில்லை என்ற அடிப்படையில் வாக்களிப்பது ஒன்றே மக்களின் மீது திணிக்கப்படும் முடிவாக உள்ளது. பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலிலும் அந்த அடிப்படையிலேயே ஒருவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பது மாத்திரமே கசப்பான யதார்த்தம்.

Leave A Reply

Your email address will not be published.