சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமாக செயல்பட்டுவந்தவர் கீரன் பொல்லார்ட். 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுன் ஒருநாள் அணிக்காக அறிமுகமான இவர், 2008ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும் தனது பயணத்தை தொடர்ந்தார்.
இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்ட், மூன்று சதம், 13 அரைசதங்களுடன் 2,706 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் பந்துவீச்சில் 55 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் 101 ஆட்டங்களில் பங்கேற்று 1,569 ரன்களையும், 42 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆனால் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.
அதுமட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று 10ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கீரன் பொல்லார்ட் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தேர்வாளர்கள், நிர்வாகக் குழுக்கள் மற்றும் குறிப்பாக, பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆகியோருக்கு என்னில் உள்ள திறனைக் கண்டதற்காகவும், எனது வாழ்க்கை முழுவதும் அவர்கள் என் மீது உறுதியாக வைத்திருந்த நம்பிக்கைக்காகவும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் என்மீது காட்டிய நம்பிக்கையும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட்டிற்கு, குறிப்பாக நான் கேப்டனாக இருந்த காலத்தில் அவர் அளித்த தளராத ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன