ஆட்டநாயகன் விருதை சக வீரருடன் பகிர்ந்து கொண்ட குல்தீப் யாதவ்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய குல்தீப் யாதவ், இந்த விருதை தனது சக வீரரான அக்ஷர் பட்டேலுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து குல்தீப் யாதவ் பேசுகையில், “ஆட்டநாயகன் விருதை அக்ஷர் பட்டேலுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அக்ஷர் பட்டேல் இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார்.
ரபாடாவிற்கு எதிராக நான் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளதால், அவர் பேட்டிங்கில் எப்படி செயல்படுவார் என்பது எனக்கு தெரியும். அவருக்கு ஒரு சைனாமேன் பந்துவீசிவிட்டு அடுத்த பந்து கூக்ளி வீச வேண்டும் என்பதே எனது திட்டம். எனது இரண்டாவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் தான் காரணம், அவர் சொன்னபடி பந்துவீசி தான் விக்கெட் எடுத்தார். இந்த தொடரில் நான் அதிக நம்பிக்கையுடனும், பெரிய உத்வேகத்துடனும் விளையாடி வருகிறேன்.
பந்துவீச்சில் எனது லைன் மற்றும் லென்த்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். பேட்ஸ்மேன்களின் பலவீனம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப எனது பந்துவீச்சை மாற்றிகொள்வதில் இருந்து தற்போது மாறிவிட்டேன்,
நான் எனது வேலையை சரியாக செய்வதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் நான் எவ்வித அழுத்தமும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன், இதற்கு ரிஷப் பண்ட் தான் காரணம்” என்று தெரிவித்தார்.