துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்
ரம்புக்கன துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக , கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), ரம்புக்கனை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் (SP) மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) ஆகிய மூவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதேசத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரது சாட்சியங்கள், சுயாதீன விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் என்பனவே இதற்குக் காரணம்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை தனது திணைக்களத்திற்கு கொண்டு வந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், டபிள்யூ.திலகரத்ணவிடம் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ண உத்தரவிட்டுள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளை நாரம்பெத்த – ஹிரிவடுன்னவில் நடைபெறும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இறுதிக் கிரியைகள் இடம்பெறும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினருக்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.