உங்கள் உதவி எமக்கு தேவையில்லை : எமக்கு தேவை நீதி – சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி
ரம்புக்கணயில் போலீசாரின் துப்பாக்கியால் கொலை செய்யப்பட்ட கணவரின் இறுதிச் சடங்கிற்கு உதவ வந்த அழைக்கப்படாத இராணுவத்தினர் , கூடாரம் அமைத்து உணவு கொண்டு வந்து தர முயல்வதாக பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட , சமிந்த லக்ஷனின் மனைவி சமன் குமாரி , கேகாலை நீதவான் வாசனா நவரத்ன முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது கணவர் ராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் படையிலோ பணிபுரியவில்லை, எனவே இறுதிச் சடங்கிற்கு ராணுவத்தின் உதவி தங்களுக்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
இராணுவ குழு ஒன்று இன்று காலை எமது வீட்டிற்கு வந்து உதவி செய்ய கேட்டதாகவும், அவர்கள் வீட்டுக்கு வந்து வெளியில் அமைத்த கூடாரம் இன்னும் அங்கேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமன் குமாரியின் கண்ணீர் சாட்சி பின்வருமாறு,…..
“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பெற்றோல் செட்டுக்கு , எரிபொருள் நிரப்பப் போவதாக என் கணவர் கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் ஒருவர் எனக்கு போண் செய்து, உங்கள் கணவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். நான் கேகாலை மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு கணவரை மருத்துவமனை தள்ளுவண்டியில் பார்த்தேன். பின்னர் நான் வீட்டிற்கு வந்தேன். ”
“நாங்கள் வீட்டில் இருந்தபோது, ஆயுதம் தரித்த ஆட்களை ஏற்றிக்கொண்டு ராணுவ டிரக் ஒன்று எங்கள் வீட்டுக்கு வந்தது. அங்கு சுமார் 20 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு நட்சத்திர அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் என்னிடம், “நாங்கள் உங்களுக்கு உதவ வந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம். ” ஒரு கூடாரத்தைக் கொண்டு வந்து அடித்தார்கள். அவர்கள் எங்களுக்கு உணவும் பானமும் கொண்டு வந்தனர்.
“சிறிது நேரத்திற்குப் பிறகு, எனது கணவர் இராணுவத்திலோ அல்லது பாதுகாப்புப் படையிலோ வேலை செய்யவில்லை, எனவே உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். பின்னர் அவர்கள் சென்றுவிட்டனர். இன்று காலையும் அந்தக் குழு எங்கள் வீட்டுக்கு வந்தது. நான் அவர்களிடம், “ஐயா, நீங்கள் இங்கு இருக்க வேண்டியதில்லை” என்று சொன்னேன். அந்த கூடாரம் இன்னும் இருக்கிறது.
என் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இது கடைசி மரணமாக இருக்கப்போவதில்லை. மேலும் பலரை சுட்டுக் கொன்று விடுகிறார்கள். எனவே எனது கணவருக்கு நீதி வழங்குங்கள். அவர்கள் சீருடை மற்றும் நட்சத்திரங்களை அணிந்த கொலைகாரர்கள் ”
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (21) இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடையவில்லை என கேகாலை நீதவான் வாசனா நவரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த குற்றம் தொடர்பாக இதுவரை இரண்டு பக்க ஆதாரங்களை மட்டுமே போலீசார் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்துவதற்கு அரச பகுப்பாய்வாளரை பொலிஸார் அழைக்கவில்லை என்பதும் நீதிமன்றில் தெரியவந்ததையடுத்து, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அரச பகுப்பாய்வாளரை அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை இதுவரை ஆய்வு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அவற்றை பரிசோதிக்க நீதிமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ள பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணையில் அனுராத ராஜபக்ச சாட்சியமளிக்கையில், இரண்டு நட்சத்திரங்கள் மற்றும் அரச சின்னத்துடன் சீருடையில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போராட்டத்தின் போது, “உயர சுட வேண்டாம் , சாகிறதுக்கு சுடுங்கள் ” என கட்டளை இட்டதாக ஒருவர் சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கு இன்று (22) காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.