நானும் ரவுடி தான்.. விளாத்திகுளம் பகுதியில் அலப்பறை கொடுத்த ஆசாமி கைது
நானும் ரவுடி தான் என்ற பாணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அடிதட்டு மக்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை சமூக ஆர்வலர் பெயரில் அலப்பறை கொடுத்த வந்த அயன்ராசபட்டி கிராமத்தினை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (57) என்பவரை மாசார்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன்ராசாபட்டி கிராமத்தினை சேர்ந்தவர் முனியசாமி, இவர் சென்னையில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் தனது சொந்த ஊரில் காண்டிராக்ட் முறையில் வீடு கட்டி தரும் தொழிலும் செய்து வருகிறது. அந்த வகையில் முனியசாமி தனது உறவினர் கோவிந்தராஜ் என்பவருக்கு தற்பொழுது அவரின் சொந்த இடத்தில் வீடுகட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (57) தான் ஒரு சமூக ஆர்வலர், கோவிந்தராஜ் வீடு கட்டும் இடத்தில் வில்லங்கம் இருப்பதாகவும், எனவே தனக்கு பணம் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அரசு அதிகாரிகளுக்கு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டுவதாக தகவல் கொடுத்து பணிகளை நடத்த விடமாட்டேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் முனியசாமி சரியான இடத்தில் தான் வீடுகட்டி வருகிறோம். பணம் எதுவும் தர முடியாது என்று சொல்லியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முனியசாமி மற்றும் கோவிந்தராஜ் இருவரும் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டு இருக்கும் போது அங்கு வந்த சிவசுப்பிரமணியன் தனக்கு பணம் தர வேண்டும், இல்லை என்றால் இந்த ஊரில் வீடு கட்டி நீ குடியிருக்க முடியாது என்று மிரட்டியது மட்டுமின்றி, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கொல்லமால் விடமாட்டேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் சிவசுப்பிரமணியை சத்தம் போட்டு அனுப்பியது மட்டுமின்றி, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாசார்பட்டி போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவசுப்பிரமணியை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
சிவசுப்பிரமணியன் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள வருவாய்துறை, ஊராக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறை என அனைத்து அரசு ஊழியர்களும் மகிழச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணம் கைது செய்யப்பட்டுள்ள சிவசுப்பிரமணியன் கொடுத்த அலப்பறைகள் அப்படி என்கின்றனர் காவல்துறை.
தொடக்கத்தில் பால்வியாபாரம் செய்து வந்த சிவசுப்பிரமணியன், பின்னர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் அரசு அலுவலகங்களுக்கு பெட்டிஷன் போடுவது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது, பணம் பறிப்பது என்ற வேலை செய்ய தொடங்கியுள்ளார். சிலர் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்று பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் மீது தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு பெட்டிஷன் போட்டு அவர்களை மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எட்டயபுரம் தாலூகா அலுவலகம், புதூர் ஊராட்சி ஒன்றியம், மின்சாரவாரியம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் தனது வேலையை காண்பித்தது மட்டுமின்றி, காவல்துறையினரையும் சிவசுப்பிரமணியன் விட்டு வைக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெட்டிஷன் போடுவது, ஊரில் யாரவாது வீடு கட்டினால் மாமூல் கேட்பது என தொடர்ந்து தனது மிரட்டல் சம்பவங்களை செய்து வந்துள்ளனர். இவருடைய தொந்தரவு தாங்க முடியாமல் பலர் கேட்கும் பணத்தினை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் சிலர் காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்துள்ளனர்.
புதூரில் ஊராட்சி ஒன்றியம், மின்சாரவாரியத்தில் ஊழியர்களை மிரட்டியதாக புதூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போன்று மாசார்பட்டி காவல் நிலையத்திலும் ஒரு பெண் கொடுத்த புகாரின் பெயரில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. பார்க்க சாதாரணமாக தெரியும் சிவசுப்பிரமணியனுக்கு எப்படி இந்த தைரியம் என்று பலருக்கும் ஆச்சரியம் வரும், அவருக்கு பின்னால் அப்பகுதியை சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும், அவர் தனக்கு வேண்டாதவர்கள் மீது சிவசுப்பிரமணியன் மூலமாக பெட்டிஷன் போட்டு தனக்கு வேண்டியதை சாதித்து கொண்டு வருவதால், காவல் நிலையத்திற்கு புகார் சென்றாலும், அந்த அரசியல் பிரமுகர், புகார் கொடுத்தவரை அழைத்து பேசி பஞ்சாயத்து செய்து அனுப்பி விடுவதால் ஒவ்வொரு முறையும் சிவசுப்பிரமணியன் தப்பித்து வந்த நிலையில் தற்பொழுது சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது புகார் கொடுத்துள்ள முனியசாமியிடம் 1 லட்ச ரூபாய் வரை பணத்தினை கறந்த நிலையில், மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த நிலையில் தான் புகார் அளித்துள்ளதாக கூறுகின்றனர். தெருவில் சின்ன சண்டை நடந்தாலும் அங்கும் மூக்கை நுழைத்து சிறிய பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கி அதில் வருமானம் பார்ப்பதிலும் சிவசுப்பிரமணியன் பெரிய கில்லாடி என்கின்றனர்.
இது குறித்து சிவசுப்பிரமணியன் உறவினர்களிடம் கேட்ட போது அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுப்பதால் அரசு அதிகாரிகளுக்கு சிவசுப்பிரமணியன் மீது கோபம் என்கின்றனர்.