ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இராணுவ உளவுத்துறை பிரிவு? – மனுச நாணயக்கார (Video)
ஈஸ்டர் தாக்குதல் அரசியல் மாற்றம் ஒன்றை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்காகவே நடத்தப்பட்டது என நேற்று (21) பாராளுமன்றத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.
2018 வருடத்தில் பலரும் பல கருத்துக் கணிப்புகளை செய்தார்கள். நாங்களும் கருத்துக்கணிப்பு ஒன்றை செய்தோம். ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் ரணில் பங்கு பற்றினால் அவருக்கான வாக்குகள் எப்படி இருக்கும் சஜித் பிரேமதாச பங்கு பற்றினால் அவருக்குரிய வாக்குகள் எப்படி இருக்கும் கோத்தாபய ராஜபக்ஷ பங்கு பற்றினால் அவருக்குரிய வாக்குகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்தோம். அந்த அடிப்படையிலேயே சஜித்தை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தோம்.
கோத்தாபய ராஜபக்ச அந்தப் போட்டியில் சஜித்துக்கு அருகில் கூட இருக்கவில்லை. இந்தக் கருத்துக்கள் கணிப்புகளின் அடிப்படையில் 70% சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றால் மட்டுமே கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக முடியும் என்பது தெளிவானது. இதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்கள் பயிற்சிகள் போன்றவற்றை கொடுத்து கட்டியெழுப்பிய, ராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு இருந்த, ஸஹரான் குழு பயன்படுத்தப்பட்டது.
பௌத்த இடங்களை தாக்கினால் பௌத்த வாக்குகளை எப்படியும் பெறலாம். கத்தோலிக்க வாக்குகளும் தேவை என்பதற்காகவே கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டன. பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக எமது அரசாங்க காலத்தில் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த “ஸலே” இதற்குப் பின்னணியில் இருந்து செயற்பட்டார். நாட்டுக்குள் இது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் வந்தபோது நிலந்த ஜயவர்தன அந்த தகவல்களை தடுத்து நிறுத்தினார்.
இந்தத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விசாரணைகள் அனைத்தும் ஒரே முடிவையே தெரிவித்தன. இந்த தாக்குதலுக்கும் வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.
21ம் திகதி தாக்குதல் நடந்தது.
25 ஆம் திகதி ஆமி மொஹிடீன் என்பவர் மட்டக்களப்புக்கு போய் மாத்தளை ஸஹ்ரான் என்பவரை சந்தித்து அவர் ஊடாக ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு கொண்டு அவர்கள்தான் தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டார்கள்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஐஎஸ்ஐஎஸ் சிந்தனையை சார்ந்தவர்கள் தான் என்பதை நிரூபிக்கும்படி ஐஎஸ்ஐஎஸ் கேட்டுக்கொண்டு அதன்படிதான் அந்த வீடியோக்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு ஷானி அபேசேக்கர தலைமையிலான குழு ஆமி மொஹிதீன் என்பவரை கைது செய்த போது “இது எங்களுடைய ப்ரொஜெக்ட் ஒன்று” என்று சொல்லி ராணுவத்தினர் அவரை விடுதலை செய்து அழைத்துக் கொண்டு போனது.
இது இலங்கை ராணுவத்தின் வேலை என்று நான் சொல்லவில்லை. ராணுவ தளபதிக்கு இது பற்றி தெரியாது. ராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு விசுவாசமான ஒரு அணியே இதை முன்னின்று செய்தது.
நிலந்த ஜயவர்ஜன இந்த தகவல்களை முறைப்படி அறிவிக்கவில்லை என்று நாம் அன்று சொன்னபோது எமது வாயை மூட முயற்சித்தார்கள்.
இன்று அவர்களே நிலந்த ஜயவர்தனவை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். இப்போது மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி உள்ளதால் அவர்களை சிக்க வைத்து தாங்கள் தப்பிக் கொள்வதற்கு இப்படி செய்கிறார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தால் “negligence” என்ற குற்றம் நடந்தது. அவர்கள் இப்படியான தாக்குதல் ஒன்றை தடுக்கவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அதை தடுக்க முடியாத வகையில்முழுமையான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப் படாமலேயே இருந்தது. நிலந்த ஜயவர்தனவை தாண்டி தகவல் போவது தடுத்து நிறுத்தப்பட்டது.
52 நாள் ஆட்சியில் சதித் திட்டம் மூலம் ஆட்சியை பெற்றுக்கொள்ள முயற்சித்தார்கள். அது தோல்வி அடையும் பொழுதே இந்த தாக்குதல் பற்றிய திட்டமிடலை ஆரம்பித்தார்கள்.
அந்தத் காலப்பகுதியின் பின்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (பிரதமர்) ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படவில்லை, பாதுகாப்பு உதவி அமைச்சர் அழைக்கப்படவும் இல்லை, பொலிஸ் மா அதிபர் அழைக்கப்படவும் இல்லை.
மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணிலுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி குட்டி குட்டி குண்டுவெடிப்புகள் மட்டுமே நடக்கும் என்று குண்டு தாக்குதல் அவரை ஏமாற்றி அவரையும் நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு தான் இந்த தாக்குதலை செய்தார்கள்.
தாக்குதல் நடந்த அன்று வெவ்வேறு இடங்களில் பிடிபட்ட சின்ன சின்ன குண்டுகள் அந்த திட்டத்தின் பகுதியே.
குற்றவாளிகள் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.