சமிந்தவின் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் -சஜித் வலியுறுத்து.
சமிந்த லக்சானின் மரணம் ஒரு கொலை எனவும், மேலும் அது ஒரு குற்றவியல் சார்ந்த குற்றம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தமது வீட்டுத் தேவைக்காக எண்ணெய் பெற்றுக்கொள்ள வந்த சமிந்தவை கொடூரமாகக் கொலை செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசின் அடக்குமுறை சார்ந்த நடவடிக்கைகளால் ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகிப் பலியாகிய இரு பிள்ளைகளின் தந்தையாரான கரந்தகஸ்தென்ன – நாரம்பந்த பிரதேசத்தில் வசித்து வந்த சமிந்த லக்சானின் வீட்டுக்கு இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தனது கணவரின் மரணத்தால் துயரடைந்துள்ள சமிந்த லக்சானின் அன்பு மனைவி மற்றும் அவருடைய இரு பிள்ளைகளுடன் தனது துயரத்தைப் பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
குடும்பத்தின் அத்தியாவசிய எதிர்காலச் செயற்பாடுகளுக்காக நிதி உதவி வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், தேவைப்படும் எந்நேரத்திலும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர்களுக்காக முன்நிற்பதாகவும் இதன்போது உறுதியளித்தார்.