டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் இருவரும் அதிரடியாக ஆடினர்.
படிக்கல் 35 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் சதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 116 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 28 ரன்னிலும், பிரித்வி ஷா 37 ரன்னிலும் அவுட்டாகினர். சர்ப்ராஸ் கான் ஒரு ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் ஒரு ரன்னிலும், ஷர்துல் தாக்குர் 10 ரன்னிலும் அவுட்டாகினர். லலித் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வீசினார். மெய்டனாக வீசியதுடன், ஒரு விக்கெட்டும் எடுத்தார்.
கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசிய பாவெல், 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் அணி பெறும் 5வது வெற்றி இதுவாகும்.
ராஜஸ்தான் சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட், அஸ்வின் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.