ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பிற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றதாக தகவல்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 43 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதே போல மசார்-இ-ஷரிப் மற்றும் ஷேடோகான் ஆகிய பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உடனடியாக எந்த அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில், தற்போது ஐ.எஸ். அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.