கோட்டா – மஹிந்தர் முரண்பாடு உச்சம்! மாறி மாறிக் கால்வாரலுக்குக் களம் தயார்.
தற்போதைய ஆட்சிப்பீடத்துக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உச்சம் பெற்று வருகையில் அரசு தரப்பில் சகோதரர்களான தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் கருத்து முரண்பாடு உச்சம் அடைந்திருப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதன் மூலம் அரசுக்கு எதிராக மக்களின் சீற்றத்தைத் தணிக்கலாம் என்று கருதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதற்காக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்கி 19 ஆவது திருத்த ஏற்பாடுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தன்பாட்டில் முன்னெடுத்து இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கும் முயற்சியை தன் அனுமதி இல்லாமல் – அல்லது தன்னோடு கலந்தாலோசனை செய்யாமல் – பிரதமர் முன்னெடுத்து இருப்பது ஜனாதிபதியைச் சீற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதேசமயம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலக்குவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் ஒரே ராஜபக்சவாகத் தான் மட்டுமே இருப்பதை மக்களுக்குக் காட்டி, ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாகத் தெரிவித்து, மக்களைச் சமாளிக்கலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய கருதுகின்றார் எனத் தெரிகின்றது.
இதற்கான காய்நகர்த்தல்களை தனக்குச் சாதகமான எம்.பிக்கள் மூலம் அவர் முன்னெடுக்கின்றார் எனப் பிரதமர் கருதுகின்றார்.
இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசு விலக்கப்பட வேண்டும் என்று டலஸ் அழகப்பெரும உட்பட சிலர் அரசுக்குள் வலியுறுத்துகின்றனர். அத்தகையோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வழிகாட்டலில் இந்த வழிமுறையை வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பு கருதுகின்றது.
புதிய வாரத்தில் அரசின் இரண்டு பெரும் தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் பிரதிபலிப்புகள் அப்பட்டமாக வெளிப்படும் என விடயமறிந்த கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.
டலஸின் கடிதம்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தற்போதைய அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
தற்போதைய அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசை அமைக்கவேண்டும். அந்த அமைச்சரவை சிறியதாக அமைய வேண்டும் என்பதுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்பட வேண்டும் என்றும் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்துப் பேசிய பின்னரே இத்தகைய கடிதம் ஒன்றை எழுத்தில் அவர் அனுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரகசியக் காய்நகர்த்தல்
ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அருகியுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இரகசியப் பேச்சுகள் நடந்து வருகின்றன என உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி ஒன்று தகவல் வெளியிட்டது.
அரச தலைவர்களுக்கு எதிரான மாநாயக்க தேரர்களின் அறிக்கை, ஆளுங்கட்சியின் மேலும் 13 எம்.பிக்கள் சுயாதீனமாக இருக்க எடுத்துள்ள முடிவு, அமைச்சரவை நியமனத்தால் அதிருப்தியடைந்துள்ள அரச தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தீர்மானம் உட்பட்ட பல காரணங்களை முன்வைத்து இந்த அரசைக் கலைத்து, மாற்று ஏற்பாடாக இடைக்கால ஆட்சியொன்றை ஏற்படுத்த இரகசியப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த இடைக்கால அரசில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளை வழங்கவும், அதில் பிரதமர் பொறுப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவும் ஆராயப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் நால்வர் அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுள்ளமையால் அரசின் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.
அரசிலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில அணியே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரகசியக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்ற்னர் எனத் தெரியவருகின்றது.