ரம்புக்கனையில் பவுசருக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞர் மீண்டும் விளக்கமறியலில்
ரம்புக்கனை சம்பவத்தில் எரிபொருள் பவுசருக்கு தீ வைத்த அல்லது தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இன்று பிற்பகல் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு பதில் நீதவான் மெல்கம் மெச்சாடோ உத்தரவிட்டார்.
எனினும் குறித்த இளைஞன் உரிய பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தின் போது பொலிஸாருடன் இருந்த இளைஞன் ஒருவர் அண்மைய நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அப்போதுதான் எரியும் எண்ணெய் பவுசருக்கு அருகில் வந்து, அதில் சிக்கியிருந்த மரக்கிளையை அகற்றிவிட்டு திரும்பும் வீடியோவும் வீடியோ ஊடகங்களில் வெளியானது.
இன்று காலை குறித்த இளைஞன் வீட்டில் இருந்த போது இனந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்று காலை ரம்புக்கனை மற்றும் கேகாலை பொலிஸ் நிலையங்களில் வினவிய போது அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தனர்.
எனினும், குறித்த இளைஞரின் வீட்டுக்கு, ரம்புக்கனை, பின்னவலவத்தை, தர்மபால மாவத்தைக்குச் சென்று விசாரித்தோம்.
சம்பம் தொடர்பான 28 வயதான இந்திக பிரசாத்தை பொலிஸார் வந்து அழைத்துச் சென்றதாக அவரது தாயும் தந்தையும் தெரிவித்தனர்.
பின்னர் ரம்புக்கனை பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் கட்டுக்கடங்காத கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.