இடைக்கால அரசிலும் நானே பிரதமர்! – டலஸுக்கு மஹிந்த பதிலடி
இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமாயின் அது எனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள குரல் பதிவில்,
“அரசைப் பொறுப்பேற்க யாரும் முன்வராதபோது, யாரை பிரதமராக நியமிப்பது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இடைக்கால அரசிலும் நானே பிரதமர். வரலாறு தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களே என்னைப் பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொல்கின்றனர்.
இதனைவிட நெருக்கடியான சூழ்நிலைகளை இலங்கை சந்தித்திருக்கின்றது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் சக்தி அரசுக்கு இருக்கின்றது.
கொழும்பு – காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பேச்சுக்கு நான் அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.