ரம்புக்கனை சூடு தொடர்பில் எஸ்எஸ்பி அடுத்த வாரம் கைது செய்யப்படுவார்
ஏப்ரல் 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்ட கேகாலை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி. கீர்த்திரத்ன அடுத்த வாரம் நிச்சயமாக கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட தருணத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன இந்த சம்பவத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் , அரை மணித்தியாலத்தில் பொதுமக்களின் எதிர்ப்பின் சூடு தணிந்திருக்கும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் தெரியவந்த தகவலின்படி,
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி முதல் ரம்புக்கனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் நின்ற போதிலும் அது கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 19ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருள் பௌசரை, எரிபொருள் விலையேற்றத்திற்கு முன்னர் வழியிலேயே கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளதாகவும், அப்பகுதியில் வதந்திகள் பரவி வருகின்றன.
அதன்படி, எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருளை புதிய விலையில் வழங்காமல் பழைய விலைக்கே வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது. மக்கள் , போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் தீர்த்து வைக்க சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்தார்.
பின்னர், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும், சம்பவ இடத்திற்கு எஸ்.எஸ்.பி விஜயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) எஸ்.எஸ்.பி கீர்த்திரத்னவுக்கு தொலைபேசியில் அறிவித்திருந்தார்.
இவரது வருகை தேவையற்றது என ஏ.எஸ்.பி.யால் அறிவிக்கப்பட்ட போதிலும், பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்த எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன, ஹெல்மெட் அணிந்து போராட்டத்திற்கு அருகில் வந்துள்ளார்.
SSP பின்னர் போராட்டக்காரர்களுடன் மோதலொன்றுக்கு சென்று , கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். கண்ணீர்ப்புகை தாக்குதலின் பின் மக்கள் கோபமடைந்து காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கத் தொடங்கினர்.
SSPயும் கல்லால் தாக்கப்பட்டதாகவும், அதனால் கோபமடைந்த எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அனைத்து தகவல்களையும் புலனாய்வாளர்கள் பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளதுடன், சம்பவத்தை சற்றும் ஏற்றுக்கொள்ளாத இருவரும், SSPக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன அடுத்த வாரம் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.