ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பொன்னாடையை கையில் கொடுக்காத விஜயேந்திரர்..சர்ச்சையாகும் வீடியோ

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது இரு பதவிகளையும் தமிழிசை வகித்து வருகிறார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் இருந்தபோது கருத்து ரீதியிலான விமர்சனங்களை கடந்து உருவ கேலி விமர்சனங்கள் போன்றவை தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக அதிகம் பரபரப்பட்டது. எனினும், அவை குறித்து தமிழிசை பெரிதாக பேசியது இல்லை. தன்னை உருவக்கேலி செய்து மீம் போடுவது மூலம் ஒருவருக்கு வருமானம் கிடைத்தால் தராளமாக அதனை செய்துகொள்ளட்டும் என்று பொது நிகழ்ச்சிகளிலேயே கூறியவர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் கந்தகிரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் காஞ்சி காமக்கோடி பீடத்தின் சங்கராசாரியாரான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு விஜயேந்திர சரஸ்வதி பொன்னாடையை வழங்கினார். அப்போது, பொன்னாடையை தமிழிசையின் கையில் கொடுக்காமல், தூக்கி போட்டுள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா ஆளுநர்,புதுவை துணைநிலை ஆளுநர் என இரு பெரிய பொறுப்புகளை வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.