மேலும் இருபது எம்.பிக்கள் ஆளும் தரப்பிலிருந்து ‘அவுட்’?
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மேலும் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுப் பக்கத்திலிருந்து வெளியேறி இன்னொரு சுயேச்சை அணியாக இயங்கத் தயாராகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியிடம் தாங்கள் முன்வைத்துள்ள இடைக்கால அரசு யோசனை நடைமுறைப்படுத்தப்படா விட்டால் நாடாளுமன்றத்தில் தாங்கள் சுயாதீனமாகச் செயற்படுவார்கள் என அவர்கள் தரப்பில் கோடி காட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 10 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது இடைக்கால அரச முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மொத்த எண்ணிக்கை இப்போது 20ஐ நெருங்குகின்றது. இவர்களின் இத்தகைய அச்சுறுத்தலுக்குப் பின்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மறைமுக ஆதரவும் ஆசீர்வாதமும் இருப்பதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இவர்கள் சுயேச்சை அணியாக இயங்கும் நோக்கோடு ஆளும் தரப்பிலிருந்து வெளியேறினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும், தான் மாற்று அரசாக இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும், அதற்கு முன்னர் நீங்களாகவே பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசு ஒன்றை நான் அமைப்பதற்கு இடமளியுங்கள் என்ற அழுத்தத்தைப் பிரதமருக்குக் கொடுக்க ஜனாதிபதி முயலுகின்றார் என்று கூறப்படுகின்றது.
அதற்கான அச்சுறுத்தலே இந்த இருபது எம்.பிக்கள் குழுவின் நகர்வு மூலம் முன்வைக்கப்படுவதாக கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
தற்போது, அரசுக்கு நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 116 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும், 20 பேர் சுயேச்சையாக மாறும் நிலையில் அரச தரப்பு எம்.பிக்கள் எண்ணிக்கை 100 ஆசனங்களுக்குள் வீழ்ச்சியடைவதுடன், அது அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இழக்கச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.