நிலக்கரி பற்றாக்குறை… 12 மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு – இருளில் மூழ்குமா இந்தியா?

மனிதர்களின் அன்றாட வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக மாறிவிட்டது மின்சாரம். 7ஆம் நூற்றாண்டில் மனிதனின் மூளையில் உதித்த யோசனை பல நூற்றாண்டுகளை கடந்து 1831ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது மின்சாரம். அன்று முதல் இன்று வரை பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு கைகொடுப்பது மின்சாரம்தான்.

இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவு கை கொடுப்பது அனல் மின் நிலையங்கள். இந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்பதால், நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த மூன்று மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியான சுமார் 400 ஜிகா வாட்களில் 280 ஜிகா வாட் மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கும் அனல் மின் நிலையங்கள், 71 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி முதல் நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேலானவை இறக்குமதி நிலக்கரியை நம்பியே உள்ளன. எஞ்சிய அனல்மின் நிலையங்களுக்கு நெய்வேலி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியே ஆதாரம். 173 ஆலைகளுக்கும் ஒருநாளுக்கு 2.76 மில்லியன் டன் நிலக்கரி தேவை.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை கடந்த ஆண்டு தொடக்கத்தில் 50 முதல் 60 டாலர் வரை இருந்தது. உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்ந்ததைப் போல, தற்போது நிலக்கரி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து நமக்கு வரவேண்டிய நிலக்கரி இறக்குமதி தடைபட்டதால், விலை 160 டாலரை நெருங்கியுள்ளது.

மற்றொரு புறம் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் நிலக்கரி தோண்டும் பணி கனமழையால் நிறுத்தப்பட்டது. கொரோனா தடைகள் முடிந்து, கோடைகாலமும் தொடங்கியதால் 38 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிடுகிடுவென மின்சார தேவை அதிகரிக்க, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, இறக்குமதியும் குறைந்து போனதால் வரலாறு காணாத வகையில் நிலக்கரி கையிருப்பு மளமளவென சரிந்துள்ளது.

இதனாலேயே, மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய மின்சாரத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது மத்திய அரசு. இதுவே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மின்தடையால் தவிக்க முதல் காரணம். தமிழ்நாட்டில் 5 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கும் நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் 8 மணி நேரம் மின் தடை நீடிக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட் மாநிலங்களில் மின் வெட்டு நேரம் 12 மணி நேரத்தை தாண்டலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். ஜூன் – ஜூலை மாதங்களில் கோடை காலம் உச்சம் தொடும் போது மின்சார தேவை அதிகரிக்கும்; ஆனால் தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லை.

மின் தேவை அதிகரிக்கும் போது அதை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு நம்மிடம் இருந்தாலும், நிலக்கரி இல்லை என்பதுதான் முதல் பிரச்சனையாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தாலும், கப்பல்கள் மூலம் அவை வந்து சேரும் வரை மின் வெட்டு பிரச்னையை தவிர்ப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

Leave A Reply

Your email address will not be published.