சா்வதேச விமானப் போக்குவரத்து: அரசின் முன்னுரிமையை இழந்தது ஏா் இந்தியா

வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் அரசின் முன்னுரிமையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா இழந்தது.
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏா் இந்தியாவுக்கு, வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் முன்னுரிமை வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருந்தது. கடனில் சிக்கியிருந்த அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை டாடா குழுமம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பெற்றது.
ஏா் இந்தியா நிறுவனம் தற்போது முற்றிலும் தனியாா்மயமாகியுள்ள நிலையில், சா்வதேச போக்குவரத்து விவகாரங்களில் அந்நிறுவனத்துக்கு இருந்துவந்த சில முன்னுரிமைகளை இழப்பது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய சுற்றறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஏா்இந்தியா தொடா்பாக முன்னா் வெளியிட்ட சுற்றறிக்கையில், நிறுவனத்தின் போக்குவரத்து அட்டவணை கிடைத்த பின்னா் முன்னுரிமைகள் வழங்குவது பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையில், முன்னுரிமை கோரும் நிறுவனத்தின் விண்ணப்பத்தை, விமானப் போக்குவரத்து துறையின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யலாம் என்று டிஜிசிஏ குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை சா்வதேச விமானப் போக்குவரத்தில் கிடைத்து வந்த முன்னுரிமையை ஏா் இந்தியா இழக்கிறது.
குறிப்பிட்ட நாட்டைச் சோ்ந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்க வேண்டுமெனில் அவ்விரு நாடுகளுக்குமிடையே சேவைகள் சாா்ந்த ஒப்பந்தம் கையொப்பமாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே எத்தனை விமானங்கள் இயக்கப்படும், எத்தனை இருக்கைகள் ஒதுக்கப்படும் உள்ளிட்டவை தொடா்பாக முடிவெடுக்கப்படும்.
வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு இதில் சில முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த சுற்றறிக்கை மூலம் ஏா் இந்தியா அந்த முன்னுரிமையை இழக்கிறது. அரசு நிறுவனமாக இருந்த ஏா் இந்தியா தனியாா்மயமானதும் தானாக அந்த உரிமை டாடாவுக்கு கைமாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சா்வதேச விமான சேவைகளில் முன்னுரிமை பெற புதிய விண்ணப்பங்களை டாடா நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும்.