எக்காரணம் கொண்டும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் : மகிந்த
பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச , இன்று மொட்டு எம்.பி.க்களிடம் உறுதிமொழியளித்துள்ளார்.
பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களை அலரிமாளிகையில் இன்று (26) சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதன் முக்கிய கருப்பொருள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்.
இந்தக் கலந்துரையாடலை நடாத்துவதற்கான ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலக வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழிவாங்கும் நோக்கில் தாம் பதவி விலகத் தயாரில்லை எனவும், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் காட்டினால் மாத்திரமே பதவி விலகத் தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இல்லை என்றால் இல்லை. எவராவது என்னை வீட்டுக்கு அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள்” என்றார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் நம்பப்படும் தாம் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அரசியலமைப்பின் பிரகாரம் பதவியில் நீடிப்பேன் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச பிரதமராக வேண்டுமா என்பது தொடர்பில் ஏற்கனவே பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும், அந்த ஒவ்வொரு கலந்துரையாடலின் முடிவிலும் தான் பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பிரதமராக நீடிப்பாரா என்பது குறித்து அடிமட்ட மக்களிடம் ஆலோசனை நடத்தவே இன்றைய கூட்டம் நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.