பாகிஸ்தானில் பல்கலைகழகத்தில் குண்டுவெடிப்பு; 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள கராச்சி பல்கலை கழகத்தின் வளாகத்திற்குள் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்த நிலையில், சீன மொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்தின் அருகே நிறுத்தியிருந்த வேனில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு திடீரென வெடிக்க செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில், 2 பெண்கள் உள்ளிட்ட 3 சீனர்கள் மற்றும் ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் அந்த மையத்தின் இயக்குனர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் ஆவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த அவர்களுடைய வாகன ஓட்டுனர் காலித் ஆவார்.
இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதுதவிர, வாங் யுகிங் என்ற சீனர் மற்றும் ஹமீது என்ற பாதுகாவலர் என காயமடைந்த 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 3 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. வேனில் 8 பேர் வரை இருந்தனர் என போலீசார் கூறுகின்றனர்.
தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.