மஹிந்த பதவி விலக வேண்டும்! – கோட்டாவிடம் ‘மொட்டு’ எம்.பிக்கள் வலியுறுத்து

பிரதமர் உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசு பதவி விலக வேண்டும் என்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்ள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
அதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தான் பதவி விலகப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
கோட்டா – மொட்டு எம்.பிக்கள் நாளையும் முக்கிய சந்திப்பு
நாட்டில் அரசியல் நெருக்கடி சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நாளையும் (27) நடைபெற்றுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலகி இடைக்கால அரசு அமைய வழிவிடும் வகையிலான யோசனை ஜனாதிபதியிடம் இன்று (26) முன்வைக்கப்பட்டது. நாளைய (27) சந்திப்பிலும் அது பற்றி பேசப்படும்.
நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்” – என்றார்.