அதிகாலை 3 மணிக்கு தேர் விபத்து.. 5 மணிக்கே தொடர்புகொண்ட முதல்வர்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சை தேர் விபத்து போன்று இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், தஞ்சை மாவட்டத்தில் அதிகாலை 3 மணிக்கு விபத்து நடந்து உள்ளது. அதிகாலை 5 மணிக்கு முதலமைச்சர் என்னை தொடர்பு கொண்டு உடனடியாக நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்டு உள்ளார். இதுவரை 11 பேர் மின்சாரம் தாக்கிய விபத்தில் பலியாகி உள்ளனர். 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சரும் நேரில் வந்து பார்வையிட வரலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. முதலமைச்சரிடம் அந்த விசாரணை அறிக்கை தரப்படும். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அது போல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குழந்தைகள், இளைஞர்கள் என இறந்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அன்பில் மகேஷ், தேர் திருவிழா எதுவாக இருந்தாலும் பொதுவாக மக்கள் கவனத்துடன் இருப்பார்கள். அதிகாலை 3 மணிக்கு தேர் ஓட்டம் முடியும் நேரத்தில் நடக்க கூடாத சம்பவம் நடந்து உள்ளது. இனி இது போல் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்யும் என கூறினார்.
பள்ளிகளில் மாணவர்கள் செயல்பாடு குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை முடிந்து உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒரிரு நாளில் இது தொடர்பாக அறிக்கை வரும். ஆசிரியர்,பெற்றோர், சமூக அமைப்பு இணைந்து தான் மாணவ செல்வங்களை திருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சமீபகால நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. இதை சரி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.