11 பேரை பலிகொண்ட தஞ்சை தேர் விபத்துக்கு இது தான் காரணம் – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு!!
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது 11 பேர் உயிரிழந்த விபத்துக்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர்அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் செல்கிறார். அங்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க உள்ளார்.
இந்த விபத்து குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மற்றும் ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா ஆகியோர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலை என்பது தெரியவந்துள்ளது. பழைய சாலையை உடைத்து போடாமல் பழைய சாலை மீது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சாலை போடப்பட்டதால் பக்கவாட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் நிலை தடுமாறி விழுந்ததில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
எனவே பழைய தார் சாலையை பெயர்த்து எடுத்து போடாமல் அதன் மேலேயே போடப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.