ஜூலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசு… நாய் படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல்
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ள சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர் அதே பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை காணவில்லை என்று கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 16 ஆம் தேதி அன்று இரவு வீட்டில் வளர்த்து வந்த லேபர் டாக் குட்டியை மயக்க ஊசி செலுத்தி மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். திருடப்பட்ட நாய்க்குட்டியின் பெயர் ஜூலி. நாயை திருட வந்தவர்கள் இரண்டு ஊசிகள் கொண்டு வந்து உள்ளனர். ஒரு ஊசியில் உள்ள மருந்து அப்படியே உள்ளது. எனவே ஒரு ஊசியை நாய்க்கு செலுத்தி விட்டு இன்னொரு ஊசியை எனக்கு செலுத்தி என்னை கொன்றுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க மர்ம கும்பல் திட்டமிட்டுள்ளது என்று சந்தேகம் எழுகிறது.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி குட்டியை மீட்டுத் தரவேண்டும். எங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதே போல பக்கத்து தெருக்களிலும் செல்லப்பிராணிகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. எனவே இதில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தி செல்லப்பட்ட செல்ல பிராணியை கண்டுபிடிக்கவே, ஜூலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 50,000 பரிசாக வழங்கப்படும் என்ற சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்துள்ளதாக கூறும் செல்வராஜின் மகன் பிரவீன், இரண்டு மாத குட்டியான ஜூலி காணாமல் போய்விட்டது. இதேபோல பக்கத்து தெருவில் வளர்க்கப்பட்ட நாய் குட்டிகளும் காணமல் போயுள்ளது.
ஜூலியை காணாமல் எங்களது வீட்டில் உள்ள அதன் தாய் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. அதை பார்ப்பது எங்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோல கடத்தப்படும் நாய்க்குட்டிகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. நாய்களை கடத்திச் சென்று இரண்டு மாதத்தில் லட்சக்கணக்கில் நாய் கடத்தும் கும்பல் பணம் சம்பாதித்து விடுகிறது என்று தெரிவித்தார்.
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்களை திருடிச் சென்று விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நாய்களை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.