அமெரிக்க நாடாளுமன்றம் ராஜபக்ச குடும்ப சொத்துகள் குறித்து விசாரணை
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கும் வளச் சுரண்டலுக்கும் ஒரே குடும்பமே காரணம் என்பதை தாம் நன்கு அறிவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் ஹார்ஸ்ஃபோர்ட் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் விசாரணை ஒன்றை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பெடரல் அதிகார வரம்பிற்குள் இதுபோன்ற விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய துரதிஷ்டமான சூழலுக்கு காரணமான இலங்கையின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையைத் தொடங்கும் அதிகாரம் கொண்ட வெளியுறவுக் குழுவின் தலைவரும், மிகவும் சக்திவாய்ந்த காங்கிரஸின் நிதிச் சேவைக் குழுவின் மூத்த உறுப்பினருமான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிரிகோரி மீக்ஸுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பதாக அவர் கூறினார்.
அண்மையில் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.