கிழக்குத் திமோர் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு வளமான வாழ்கையைத் தருமா? : சண் தவராஜா
தென்கிழக்காசிய நாடான கிழக்குத் திமோரில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் ஜோஸ் ராமோஸ்-ஹொர்ட்டா வெற்றி பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாவது சுதந்திர நாடு என அறியப்படும் கிழக்குத் திமோரின் 20ஆவது சுதந்திர தினமான மே 20ஆம் திகதி புதிய அரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். 72 வயது நிரம்பிய சட்டத்தணியான ராமோஸ்-ஹொர்;ட்டா முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரும், சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவரும் ஆவார். கிழக்குத் திமோரின் பிரபல அரசியல்வாதிகளுள் ஒருவராக அறியப்படும் இவர் வெளிநாட்டு அமைச்சர், தலைமை அமைச்சர் ஆகிய பதவிகளோடு 2007 முதல் 2012 வரை அரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர். அண்மைக் காலம் வரை அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், நடப்பு அரசுத் தலைவரான பிரான்சிஸ்கோ குற்றரஸ் அவர்களைத் தோற்கடிக்கும் நோக்குடனேயே களத்துக்கு வந்தவர். மார்ச் 19இல் நடைபெற்ற முதலாவது சுற்றுத் தேர்தலில் இவர் 46 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். (முதலாவது சுற்றுத் தேர்தலில் 4 பெண்கள் உட்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.) இந்த வாக்கெடுப்பில் 22.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற குற்றரஸ் அவர்களோடு ஏப்ரல் 19இல் இரண்டாவது சுற்றில் போட்டியிட்டு 62.09 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 397,145. (2007ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் 69 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.) 37.91 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற குற்றரஸ் 242,440 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
1.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கிழக்குத் திமோரில் 860,000 மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்களுள் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் இரண்டாவது சுற்றில் வாக்களித்திருந்தனர். 17 வயதைப் பூர்த்திசெய்த யாவரும் வாக்களிக்கலாம் என்ற விதிமுறையைக் கொண்டுள்ள இந்த நாட்டில் 20 விழுக்காடு இளையோர் இந்தத் தேர்தலில் முதல் தடவையாக வாக்களித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்குத் திமோரின் முதலாவது அரசுத் தலைவரும், போராளித் தலைவருமான சனானா குஸ்மோவா தனது ஆதரவை ராமோஸ்-ஹொர்ட்டாவுக்கே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்குத் திமோர் மீள்கட்டமைப்பு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக விளங்கும் சனானா குஸ்மோவா இன்றுவரை அந்த நாட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல் தலைவராக விளங்கி வருகின்றார். அது மாத்திரமன்றி அந்த நாட்டின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்கும் ஒருவாராகவும் உள்ளார்.
கிழக்குத் திமோரில், சுதந்திரத்துக்குப் பிந்திய காலகட்டம் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. வன்முறைத் தாக்குதல்கள், கலவரங்கள், அரசியல் இழுபறிகள் என நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில், சனானா குஸ்மோவா தலைமையிலான கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள 2018 தேர்தலில் வெற்றி பெற்றிருந்த குற்றரஸ் மறுத்திருந்தார். இதனால் முழுமையான அமைச்சரவை இல்லாமலும், வருடாந்த நிதிநிலை அறிக்கை இல்லாத நிலையிலுமே அரசாங்கத்தை நடத்திச் செல்ல வேண்டிய நிலை அவருக்கு உருவாகி இருந்தது. குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகள் உள்ளதாகத் தெரிவித்து தனது செயலை குற்றரஸ் நியாயப்படுத்தியிருந்தார். அதேவேளை, அவர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டுத் தெரிவித்திருந்தது. எனினும் நடப்பு அரசுத் தலைவரின் கருத்தைப் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊடகர்களைச் சந்தித்த ராமோஸ்-ஹொர்ட்டா, “ஜனநாயகம் மீது அபிமானம் கொண்ட எனது மக்களிடம் இருந்தும், இந்தத் தேசத்திடம் இருந்தும் நான் ஆணையைப் பெற்றுள்ளேன்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். இவரது தேர்தல் வெற்றியையிட்டு முன்னாள் காலனித்துவ நாடான போர்த்துக்கல்லின் அரசுத் தலைவர் மார்சலோ ரெபோலோ டீ சொய்சா வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
தேர்தல்கள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்று முடிந்திருந்தாலும் ராமோஸ்-ஹொர்ட்டா முன்னே பல சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியாக வேண்டும். வறுமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்களை உருவாக்குதல், அனைத்துக்கும் மேலாக கட்சிகள் இடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்துதல் போன்ற வாக்குறுதிகள் அவர் முன்னே காத்திருக்கின்றன.
கொரோனாப் பெருந் தொற்று காரணமாக உலகளாவிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளமை தெரிந்ததே. அந்த வகையில் கிழக்குத் திமோரும் பெருந் தொற்றுக் காலகட்டத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. உலக வங்கியின் கணிப்பிட்டின் பிரகாரம் அந்த நாட்டு மக்களுள் 42 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர் என அறிய முடிகின்றது.
அது மாத்திரமன்றி ஒரு சுமுகமான ஆட்சியை நடத்திச் செல்வதற்கு ஏதுவாக தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்தப் போவதாகவும் அவர் தேர்தல் மேடைகளில் வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தோளோடு தோள் நின்று போராடிய முன்னாள் போராளிகளே தற்போது எதிரெதிர் நிலைப்பாட்டுடன் கட்சிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இவர்களை ஒரு இணக்கப்பட்டுக்குக் கொண்டு வருவது மிகச் சவாலான விடயமாக இருக்கும் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறி உள்ளனர். அதேவேளை, அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சி கைகூடுமா, அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் நாட்டில் மீண்டும் மோதல்கள் தலைதூக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முரண்பாடுகளைக் கையாளுவதில் சிறந்தவர் எனக் கருதப்படுபவர் ராமோஸ்-ஹொர்ட்டா. நாட்டில் அமைதியைக் கொண்டுவரப் பாடுபட்டார் என்பதற்காகவே 1996ஆம் ஆண்டில் இவருக்கும் ரோமன் கத்தோலிக்க பேராயர் சிமனஸ் பெலோ அவர்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. அது மாத்திரமன்றி அரசுத் தலைவராக இருந்த அவர் மீது 11.02.2008 அன்று நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதலில் இருந்தும் அவர் தப்பியிருந்தார். அவரது இந்த அனுபவங்கள் அவரது இரண்டாவது அரசுத் தலைவர் பதவிக் காலத்தில் கிழக்குத் திமோரில் ஒரு நிலையான ஆட்சியை வழங்கவும், அந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவும் என நம்பலாம்.