பெங்களூருவில் தரையிறங்கிய விமான டயர் வெடிப்பு: பயணிகள் உயிர் தப்பினர்
பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு முன்னதாகவே டயர் வெடித்து சிதறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
தாய் ஏர்வேஸின் டிஜி 325, போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் 150 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பாங்காங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.
இந்நிலையில், விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தரையிறங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் போதுதான் விமானத்தின் பின்புற டயர் வெடித்திருப்பதை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இருப்பினும், எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பயணிகளை இறக்கிய பிறகு, விமானத்தை ஆய்வு செய்யும் பணிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விமான நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் புதன்கிழமை மாலை உதிரி பாகங்களுடன் பெங்களூரு வந்து விமானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை மீண்டும் பாங்காங் செல்ல இருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும், வியாழக்கிழமை மீண்டும் பாங்காங் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தனர்.