கைது செய்ய உத்தரவு வந்ததும், எஸ்.எஸ்.பிக்கு வாந்தி : ஏ.எஸ்.பிக்கும் சுகயீனம், ரம்புக்கனை கொலைக் கும்பலே மருத்துவமனையில்!
ரம்புக்கனையில் மக்கள் போராட்டத்தின் போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள ரம்புக்கனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சமிந்த தர்மரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமிந்த தர்மரத்ன எம்பிலிப்பிட்டியவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது இளைஞர் ஒருவரை கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து தரையில் தள்ளி கொலை செய்த குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராவார்.
கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எஸ்.பி. கீர்த்திரத்ன, உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் வாந்தி எடுத்ததாக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைக் கண்காணிக்க பொலிஸ் குழுவொன்று நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் பொலிஸ் காவலில் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனையடுத்து, ASP தர்மரத்ன மற்றும் ஏனைய ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பல்வேறு சுகவீனங்களுடன் இன்று குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.