38 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு – தடை செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?
அண்டை நாடான பாகிஸ்தானின் 6 சேனல்கள் உட்பட 16 யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்து உள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதாக குறிப்பிட்ட யூடியூப் சேனல்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இதே காரணங்களுக்காக இந்த மாத தொடக்கத்தில் 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்தது. இப்போது இந்த பட்டியலில் புதிதாக 16 யூடியூப் சேனல்கள் சேர்ந்து உள்ளன. முன்பு முடக்கப்பட்ட 22 யூடியூப் சேனல்களில் 4 சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவை. ஆக மொத்தம் இந்த மாதத்தில் (ஏப்ரல் 2022) மத்திய அரசால் தடை செய்யப்பட்டு உள்ள சேனல்களின் எண்ணிக்கை 38 ஆகும். இதில் பாகிஸ்தானை சேர்ந்த 10 யூடியூப் சேனல்கள் அடக்கம்.
சமீபத்திய 16 யூடியூப் சேனல்களுக்கான தடை ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த 16 சேனல்களின் ஒட்டுமொத்த வியூவர்ஸ்களின் எண்ணிக்கை சுமார் 68 கோடி என்று அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இவற்றை போலவே இந்த மாத தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட 22 யூடியூப் சேனல்களும் கோடிக்கணக்கான வியூவர்ஸ்களை கொண்டிருந்தன.
இதனிடையே தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்களைப் பொறுத்தவரை, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் இந்தியாவைப் பற்றிய போலி செய்திகளை வெளியிட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதே போல முடக்கப்பட்டு உள்ள இந்திய யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட கணிசமான அளவு தவறான விஷயங்கள் மற்றும் செய்திகள் உக்ரைனில் நிலவும் சூழலுடன் தொடர்புடையது மற்றும் பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் (ஏப்ரல் 2022) இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ள 38 யூடியூப் சேனல்களின் விவரங்கள் கீழே..
ஏப்ரல் 2022-ல் தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்களின் முழு பட்டியல்:
ARP News, AOP News, LDC News, SarkariBabu, SS ZONE Hindi, Smart News, News23Hindi, Online Khabar,DP news, PKB News, KisanTak, Borana News, Sarkari News Update, Bharat Mausam, RJ ZONE 6, Exam Report, Digi Gurukul, दिनभरकीखबरें, Saini Education Research, Hindi Mein Dekho, Technical Yogendra, Aaj te news, SBB News,Defence News24x7, The study time, Latest Update, MRF TV LIVE, Tahaffuz-E-Deen India.
ஏப்ரல் 2022-ல் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்களின் முழு பட்டியல்:
DuniyaMeryAagy, Ghulam NabiMadni, HAQEEQAT TV, HAQEEQAT TV 2.0, AjTak Pakistan, Discover Point, Reality Checks, Kaiser Khan, The Voice of Asia, Bol Media Bol
இந்நிலையில் இந்த மாத துவக்கத்தில் 22 யூடியூப் சேனல்களை முடக்கிய போது, சில இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல டிவி நியூஸ் சேனல்களின் லோகோக்கள் மட்டுமின்றி டெம்ப்ளேட்கள் மற்றும் அவற்றின் செய்தி அறிவிப்பாளர்களின் படங்கள் உட்பட பலவற்றை பயன்படுத்தி, அப்லோட் செய்துள்ள செய்தி உண்மையானது என்று வியூவர்ஸை நம்ப வைத்து தவறாக வழி நடத்தின என்று குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.