பின்வாங்கினார் ஜனாதிபதி; இடைக்கால அரசும் ‘அவுட்’ தமக்குச் சகோதர பாசம்தான் முக்கியம் என்கிறார் கோட்டா.
தமது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அப்பதவியிலிருந்து விலக்கிவிட்டு புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் தனது உத்தேச திட்டத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார் எனத் தெரிகின்றது.
நேற்று தமது மொட்டுக் கட்சியின் எம்பிக்கள கூட்டத்தில் உரையாற்றிய அவர் தமக்குச் சகோதர பாசம்தான் மிக முக்கியம் என்று கூறியிருக்கின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் கோரவேயில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்தக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றுப் பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
பெரும்பாலான எம்.பிக்களின் கருத்து நிலைப்பாடு மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இருந்தது. இடைக்கால அரசு என்ற பேரில் பிறிதொரு தரப்புக்கு அதிகாரத்தைக் கையளிப்பதற்கு எதிராகப் பல எம்.பிக்களும் உரையாற்றினார்.
இடைக்கால அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு எதிராகப் பல எம்.பிக்கள் சத்தமிட்டு உரையாற்றி தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தினர். எனினும், டலஸ் அழகப்பெருமவைக் காப்பாற்றும் விதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றினார்.
இதையடுத்து இறுதியாக உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு எந்தக் கட்டத்திலும் தான் கோரவே இல்லை” என்றார்.
“113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு – அதாவது சாதாரண பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவு அரசுக்கு இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார் ஜனாதிபதி.
“ஆனால் வேறு ஒரு தரப்பு 113 எம்.பிக்களின் ஆதரவைக் காட்டி ஆட்சியைத் தருமாறு கோரினால் அதைச் செவிமடுக்க வேண்டியிருக்கும். அதை வழங்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் விட சகோதர பாசம்தான் எனக்கு முக்கியம். நான் எந்தக் கட்டத்திலும் பிரதமரைப் பதவி விலகுமாறு கோரவே இல்லை” – என்றார் ஜனாதிபதி.
இடைக்கால அரசை அமைக்கும் தமது உத்தேச திட்டத்திலிருந்து ஜனாதிபதி பின்வாங்கி விட்டார் என்பதையே அவரது நேற்றைய உரை எடுத்து காட்டுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, “தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் எனக்கு சாதாரண பெரும்பான்மை உண்டு. அதில் எவருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. அதில் உறுதியாக இருக்கின்றேன்” – என்றார்.
இதேவேளை, அதிருப்திக் குழுக்களின் தலைவர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார். அச்சமயத்தில் தற்போதைய அரசைப் பதவியில் இருந்து அகற்றி சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதாயின், அதற்கு முதலில் தற்போதைய அரசுக்கு எதிரான 113 எம்.பிக்களின் ஆதரவை நாடாளுமன்ற அவையில் வெளிப்படுத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி கோருவார் எனத் தெரிகின்றது. அப்படிக் கோருவதன் மூலம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் நெருக்கடிக் கட்டாயத்தில் இருந்து தற்காலிகமாகத் தம்மைக் காத்துக்கொள்ள ஜனாதிபதி முயல்வார் என்றும் தெரியவருகின்றது.