21 ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்……
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும் , அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
இதன்படி ,காலி முகத்திடலில் இன்றுடன் 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெறுகிறது.
ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ,கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி , அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறிருப்பினும் நேற்றுமுன்தினம் இரவு குறித்த பதாதைகளை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறிருப்பினும் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவான தொழிற்சங்கங்களும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தன.
மேலும் ,கொழும்பிலுள்ள அலரி மாளிகை வளாகத்தில் ‘மைனா கோ கம’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.